The News Sponsor By


The News Sponsor By
கனடாவில் குடிபெயர உள்ள அரச குடும்பம் - இங்கிலாந்து இளவரசரின் வட அமெரிக்கப் பின்னணி? Thedipaar
 Canada

கனடாவில் குடிபெயர உள்ள அரச குடும்பம் - இங்கிலாந்து இளவரசரின் வட அமெரிக்கப் பின்னணி?

 14.01.2020

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தைவிட்டு விலகி கனடாவில் குடிபெயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரான் - அமெரிக்கா போர்ப் பதற்றம், ஆஸ்திரேலியா காட்டுத்தீ, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற பல விஷயங்களுக்கு நடுவே இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பப் பிரச்னையும் உலக மக்களால் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்குச் சுதந்திரம் தேவைப்படுவதால் அரச குடும்பத்திலிருந்து விலகி வட அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் இங்கிலாந்து ராணி மற்றும் அரசுக்குத் தாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி முன்னிலையில் நடக்கவுள்ளது. இதில் ராணி எலிசபெத், ஹாரியின் தந்தை சார்லஸ், சகோதரர் வில்லியம்ஸ், இளவரசர் ஹாரி உட்பட ராஜகுடும்பத்தைச் சேர்ந்த பல மூத்த மற்றும் முக்கிய உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் அரசக் குடும்பத்தை விட்டு வெளியேறும் ஹாரி- மேகன் தம்பதி தங்களின் மீதி வாழ்நாளைக் கனடாவில் கழிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளவரசி மேகன் தன் குழந்தையுடன் தற்போது கனடாவில் தங்கியுள்ளார். ராணியுடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் ஹாரியும் அங்கு சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது. இவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமாக அந்நாட்டின் கலாசாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகன், அமெரிக்க நடிகையாக இருந்து ஹாரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரின் நெருங்கிய தோழி ஜெசிகா முல்ரோனி தன் கணவர் பென் முல்ரோனியுடன் கனடாவின் டொரொண்டோவில் வசித்து வருகிறார். பென் முல்ரோனி கனடா நாட்டின் முன்னாள் பிரதமருடைய மகன். இந்தத் தொடர்பில்தான் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி கனடாவுக்குக் குடிபெயர முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அரச தம்பதியினருக்குக் கனடாவில் தனியுரிமை கிடைக்கும். அங்குள்ள ஊடகங்களும் அவர்களைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால், ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருக்கலாம். மேலும், ஹாரி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதற்கும் கனடாவில் நிறைய இடங்கள், வழிகள் உள்ளன. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டே இவர்கள் கனடா செல்ல முடிவெடுத்திருப்பார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இல்லாமல் இளவரசி மேகனுக்கும் கனடாவுக்கும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நட்பு உள்ளது. திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி தங்களின் விடுமுறை நாள்களில் பாதியைக் கனடாவிலேயே கழித்துள்ளனர். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இவர்கள் அரச வழக்கப்படி கொண்டாடாமல் அப்போதும் கனடாவில் தனியாகக் கொண்டாடியுள்ளனர். தற்போது ஹாரி அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

Share this news

News Subscription




Comments:-