நாட்டு முருங்கைக்கு இவ்வளவு வீரியமா..?

2 months ago



முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும்.

செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்.

நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.

ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும்.

அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும்.

ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.

முருங்கை சாகுபடி:

முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன்படி பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும்.

40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.

120-ம் நாளுக்குள் செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும்.

6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும்.

காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும்.

அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.









GET UPDATES