ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்!

2 months agoஅரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பொருட்படுத்தாது யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடமும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடமும் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல்  நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர்    வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும்   ”வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் , அந்த வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும், கோரிக்கையை முன்வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 18 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் அதிகாரமுடைய ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும் கூட இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதியின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் காப்பாற்றி வருகின்றார்.

இவ்வாறானதொரு சூழலில், தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும், எதிர்க்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் முகமாக நாளை வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றோம்.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் எதிர்வரும் சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளைப் புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

GET UPDATES