பிரிந்து நின்றாலும் வாய்ப்புக்கள் கைநழுவிப் போகும்…

6 days agoவடக்கு கிழக்கு இணைந்திருந்த காலப் பகுதியில் கிழக்கில் பல படுகொலைகள் நடைபெற்றிருக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் இணைக்கப்பட்டால் அவ்வாறான நிலை உருவாகும் என்று நாடாளுமன்றில் அமைச்சர் ஹிஸ்புல்லா அண்மையில் உரையாற்றியிருந்தார்.

சமூக ஊடகங்களில் அது ஒரு பேசுபொருளாக்கப்படடு இருக்கின்றது. அவர் தமிழ் மக்களை எச்சரிப்பதாக உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறித்த உரையிலே,

தற்போது கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமை வாழ்வதாகவும் குறித்த ஒற்றமை நீடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றார்.

ஆக, அரசியல் அதிகாரத்திற்கு முஸ்லீம்கள் வருவதற்கு வாய்ப்பாக இருக்கின்ற கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தனியாக இருக்கவேண்டும் என்பது அவருடைய அல்லது அவருக்கு வாக்களித்த மக்களின் விருப்பம்.

சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி தங்களுக்கு தேவையானதை அவா்கள் பெற்றுக்கொள்ள அவா்கள் முயற்சிக்கின்றாா்கள். அது அவா்களுடைய ஆளுமையை – சமூகம் சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.

சந்தர்ப்பங்களை பயன்படுத்த தெரியாதவா்களாக – கையாலாகாதவா்களாக நாங்கள் இருக்கின்றோம் என்பதற்காக அவா்களும் எதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று எதிா்பார்ப்பது சரியல்ல..!

அமைச்சர் ஹிஸ்புல்லா தொடர்பிலும் அவரது கடந்தகால கருத்துகள் தொடர்பிலும்… கிழக்கில் அதிகாரத்தில் இந்தவா்கள் – அதிகாரத்தில் உள்ளவா்களினால் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படும் சிலபல செயற்பாடுகள் தொடர்பிலும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிருப்திகள் இருக்கலாம்… அதிருப்திகளில் நியாயமும் இருக்கலாம்.

அதற்காக, ஒரு சமூகம் தம்மை தாமே ஆழவேண்டும் என்று விரும்புவது தவறாகாது. இனவாதமாகாது. அப்படியானால் மிகவும் மோசமான இனவாதிகளாக நாம்தான் இருப்போம்!

அதேவேளை, அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். கடந்தகால தவறுகளையும் அசிங்கங்களையும் எதிர்காலத்திற்கு வலுச்சேர்க்க பயன்படுத்த முயல்வதும் தவறு…

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதும் தவறு. அவை எதிர்காலத்தை தவறான திசைவழிப்படுத்துவதாக அமைந்துவிடும்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் கிழக்கில் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன என்பது உண்மை. கம்பெடுத்தவன் சண்டைக்காரன் என்பதுபோல, துவக்கு கிடைத்தவா்கள் எல்லாம் அப்பாவிகள்மீது தங்களது காட்டுமிராண்டித்தனத்தை காண்பித்திருந்தனா் என்பதும் உண்மை.

அந்த காண்டுமிராண்டித்தனம் அனைத்து சமூகங்களை சார்ந்தவர்களிடம் இருந்தும் வெளிப்பட்டிருந்தது…!

அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டும் இருந்தன என்பதும் உண்மையிலும் உண்மை..!

யாரும் மறுதரப்பிடம் பழியை சுமத்திவிட்டு தங்களை பற்றி புனிதர்கள் என்ற விம்பத்தை வரலாற்றில் பதிவு செய்ய முயலக்கூடாது.

அதேவேளை, இந்த படுகொலைகள் எல்லாம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமையினால்தான் எற்பட்டது என்று நிறுவ முற்படுவதும் கலப்படமற்ற சுத்துமாத்து!!

87 ஒப்பந்தத்தின் பயனாய் 88 இல் இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட முன்னரும் இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

2006 .இல் ஜே.வி.பி. இன் கைங்கரியத்தினால் சரத் என் சில்வாவின் தயவில் பிரிக்கப்பட்ட பின்னரும் அங்காங்கே தொடா்கிறது என்பதும் உண்மை.

ஆக, கடந்தகால அசிங்கங்களை எதிா்காலத்திற்காக உண்மைப் பிறழ்வுகளுடன் மீள்பதிவு செய்வது ஆரோக்கியமாக அமையாது. வாக்கு வங்கிக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக துவேஷத்தை கிளறும் பிற்போக்குத்தனத்தை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.

உண்மைகளை ஆராயாமல். காதில் விழுகின்ற செய்திகளை எல்லாம் உணர்ச்சி தராசில் சீர்தூக்குகின்ற கருத்து சிற்பிகளுக்கும் கொஞ்சம் நிதானம் தேவை!

சிறுபான்மை சமூகங்கள் இரண்டும் அபிலாசைகளை சமரசம் செய்துகொண்டு கைகோா்த்து செல்ல வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

நாம் பிரிந்துநின்று தனித்தனியான திசையில் பயணிப்போமாயின்இ அதனையே காரணம் காட்டி தீா்வை தட்டிக்கழிக்க பெரும்பான்மை தரப்பு தயராகவே இருக்கின்றது.

வாய்ப்புக்களை சரியாக கையாள்வதில் கெட்டிக்காரா்கள் என்பதை நிரூபித்துவருகின்ற முஸ்லீம் தலைமைகள் சிறுபான்மை இனங்கள் பிரிந்து நிற்பதும் புரிந்துணா்வின்றி இருப்பதும் வாய்ப்புக்களை இழக்க வழிகோலும் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டும்

GET UPDATES