ஒரு லிட்டர் சிறுநீர் ஒரு ரூபாய் : விரைவில் சிறுநீர் வங்கி துவங்குகிறதா மத்திய அரசு?

6 days ago



நாடுமுழுவதும் தாலுகா அளவில் சிறுநீர் சேமிப்பு வங்கிகள் அமைத்து,அதனைக்கொண்டு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம்.

இதன் மூலம் உர இறக்குமதிக்கு ஆகும் செலவை பெருமளவில் குறைக்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த முடிவு ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சுவிடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது. ஆனால்,அவை அனைத்தும் வீணடிக்கப்படுகிறது. எதற்கும் பயனின்றி வீணாவதை, லாபமாக மாற்றுவதே எனது கொள்கை. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சங்கடமும் இல்லை.

பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்திற்கு மாற்றாக இயற்கை உரம் உள்ளது. இதனுடன் நைட்ரஜனை சேர்க்கும் போது விவசாயிகளுக்கு உதவும்.

லிட்டர் ஒரு ரூபாய்: விவசாயிகள், நாள்தோறும் சேகரிக்கப்படும் சிறுநீரை 10 லிட்டர் கேன்களில் தாலுகா மையத்திற்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.அதற்கான கேன்களை அரசே விநியோகம் செய்யும்.

ஒரு லிட்டர் சிறுநீருக்கு ரூ.1 விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த திட்டம் முதலில் கிராம பகுதிகளில் செயல்படுத்தலாம்.ஏன் என்றல் இங்குதான், சிறுநீர் தண்ணீருடன் கலந்து கழிப்பறைக்கு செல்லாது.

இதனை சுத்தமான இயற்கை உரமாக உற்பத்தி செய்யலாம். இந்த திட்டத்தின் பொருளாதாரம் மற்றும் சாத்தியம் கூறுகள் குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இதற்கான ஆரம்ப கட்ட சோதனை நாக்பூரில் உள்ள எனது வீடருகே உள்ள ஆய்வகத்தில் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.








GET UPDATES