மீனவரிடமிருந்து பெருமளவு மீன்கள் கடற்படையினரால் பறிமுதல்

5 days agoமன்னார் பள்ளிமுனையில் கரை திரும்பிய மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரை மீன்களை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

மேலும் குறித்த மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார்.

இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையினைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் சுமார் 700 கிலோ பாரை மீன்களை பிடித்துள்ளார்.

பிடிக்கப்பட்ட மீன்களை சகமீனவர்களின் உதவியுடன் பள்ளிமுனை கடற்கரைக்கு  செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த நிலையிலேயே மீன்கள் அனைத்தும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீன்கள் டைனமட் வெடிபொருள் பயன்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தமக்கு ரகசியத் தகவல் மூலம் கிடைத்ததாகவும் கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த மீன்கள் செவ்வாய்க்கிழமை காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் சுருக்கு வலையினைப் பயன்படுத்தியே பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்ததோடு, சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு முன்பாக மீன்கள் வெட்டிக் காண்பிக்கப்பட்டன.

எனினும் குறித்த மீன்கள் டைனமட் பயண்படுத்தியே பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்படையினர் குறித்த மீனவர்களை அச்சுறுத்தியதுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 700 கிலோ பாரை மீன்களை பறிமுதல் செய்தனர்.

சட்ட ரீதியான முறையில் தாம் மீன்பிடியில் ஈடுபடுகின்றபோதும் தடை செய்யப்பட்ட டைனமெட் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடற்படையினர் தம்மீது போலி முறைப்பாடுகளை பதிவு செய்வதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடற்படையினரின் குறித்த செயற்பாடகளினால், தமது தொழில் தொடர்ச்சியாக பாதிப்பதோடு,தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்களின் நிலை குறித்து மாவட்ட கடற்தொழில் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என்.மெராண்டாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது;

குறித்த சம்பவம் தொடர்பாக மீனவர்களிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு பின் நீதிமன்றத்தில் குறித்த மீன்களின் மாதிரிகள் ஒப்படைக்கப்படும்.என அவர் தெரிவித்தார்.

GET UPDATES