கரம் கொடுத்த கனேடிய தொழிலதிபர்.. இறுதியில் நிஜ கையையே கொடுத்த தமிழ் மாணவிகள்..!!

2 weeks agoகனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹரிஹரன் கீர்த்திவாசன் நன்கொடையில் குறைந்த  விலையில், குறைவான எடையில், விரல்களை எளிதாக அசைக்கும் வகையில் செயற்கைக் கையை சென்னை மாணவிகள் 4 பேர் உருவாக்கியுள்ளனர்.

தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள செயற்கைக் கைகளில், விரல்களை விருப்பத்துக்கு ஏற்றவகையில் அசைக்க முடியாது. இந்தப் பிரச்சினையை தங்களின் வடிவமைப்பில் இந்த மாணவிகள் சரிசெய்துள்ளனர்.

இதனை சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி உயிரி மருத்துவ பொறியியல் துறை கடைசி ஆண்டு மாணவிகள் ரதி ஆதர்ஷி, சந்தான லக்ஷ்மி, ஸ்ருதி ஸ்ரீ என்னும் மூவரும், மருத்துவ மின்னியல் முடித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றும் வைஷாலினி வெங்கட்ராமன் என்பவரும் இணைந்து வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்.

மாணவிகள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான செயற்கைக் கை தொழில்நுட்பங்களைப் படித்தனர்.

3டி பிரிண்டிங் நுட்பம் குறித்து அறிந்துகொண்டனர். அதையடுத்து ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடிகிற, பேட்டரி மூலம் இயங்கக்கூடிய செயற்கைக் கை குறித்து ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து தயாரிப்பில் ஈடுபட்ட அவர்கள், செயற்கைக் கைகளின் உள்ளங்கையில், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் 7 சிறிய ரக மோட்டார்களை பொருத்திக் கைவிரல்களை இலகுவாக அசைக்க வைத்துள்ளனர்.

சர்வதேச பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கையின் எடை சுமார் 800 கிராம் மட்டுமே.

இத்தகைய நவீன அம்சங்கள் கொண்ட செயற்கைக் கைகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் விலை மிக அதிகம்.

அதே சிறப்பம்சங்களோடு கூடிய செயற்கைக் கைகளை தற்போது 64 ஆயிரம் ரூபாய்க்குத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயல்திட்டத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. கனடாவில் இந்த வடிவமைப்புக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. இதற்கு கனடா நிறுவனம் ஒன்றின் தலைவரான ஹரிஹரன் கீர்த்திவாசன் நன்கொடை அளித்தார்.
GET UPDATES