மழலையின் மகத்துவம் அறிவோமா..? மார்பில் சுரக்கும் மாமருந்து..!!

5 months agoஉலகம் முழுவதும் பிறந்த சிசுவிற்கு தாய்ப்பால் அளிக்கவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் வாரம் “உலகத் தாய்ப்பால் வாரமாக” அனுசரிக்கப்படுகிறது.

இங்கு பசியால் அழுகிற தம் பச்சிளங்குழந்தைக்கு, பொதுவில் வைத்து பாலூட்ட இயலாது என்பது எத்துணை அளவிற்கு உண்மையோ அத்துணை அளவிற்கு அவசியம், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிட வேண்டுமென்பது.

ஆனால், 2015 ஆம் ஆண்டின் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன் வைத்தது.

பண்பாடு, கலாச்சாரம் என்பதற்குள் அடக்கி வைத்து தாய்ப்பால் அளிப்பதை வலிந்து செய்யும் ஒரு நிகழ்வாக மாற்றாமல்,

எந்தச் சூழலுக்குள்ளும் சிக்காத தாய்க்கும் சேய்க்குமான பேரன்பாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று குழந்தை, தாய் நலத்தை வலியுறுத்தும் அனைத்து நிபுணர்களும், மருத்துவர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

கருத்தரித்த நாள் முதல் குழந்தையின் நலனுக்காக தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. இயற்கையான பிரசவம் என்றால் அரை மணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

”Colostrum" எனப்படும் அந்த முதல் பால் குழந்தைக்கு ஈடு இணையற்ற பாதுகாப்பையும், நோயிலிருந்து குழந்தையைக் காக்கும் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.

குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘Colostrum’ எனும் சீம்பாலில் தான் குழந்தைக்கு நோயை தாக்காமல் "Antibodies" தடுப்பு மருந்தாக இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்திற்கும் வலு சேர்க்கக் கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவைகளோடு வைட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.

குழந்தைக்கு வரும் ஊட்டச் சத்துக் குறைபாடுகளில் இருந்து இவை காப்பதோடு நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் தடுக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கருத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது.

பிட்யூட்டரியில் சுரக்கும் ஆக்ஸிடோஸின், கருப்பையை சுருங்கச்செய்து பிரசவ காலத்தின் உதிரப் போக்கிலிருந்து தாயைக் காக்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும்.

அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப் படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. அதே அளவினுக்கு இல்லாவிட்டாலும் தனியார் துறையிலும் பெண்களுக்கான மகப்பேறு கால விடுப்புகள் வழங்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அறை வெப்ப நிலையில் 8 மணி நேரமும் பிரீசரில் 24 மணிநேரமும் வைக்கலாம். மேலும் 20’c-இல் மூன்று மாதங்கள் வரை கூடப் பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்கு கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெல்ல நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ஆகவே, நம்மால் இயன்றவரை நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவோம்; தாய்மை என்னும் பேரன்பினை; பெருவரத்தினை உணர்வோம்.
GET UPDATES