யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றின் இரகசியம் வெளியானது: அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள்..!!

5 months ago



புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன.

இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது.

ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர்.

அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).

நிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.

ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது.

தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர்.

இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன.

கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.

நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை).

நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன.

இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.

நிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர்.

தற்போது பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நிலாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.

இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி) சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும்.

அப்படிப் பார்த்தால், சராசரியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டு சென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது.

ஒரு வண்டி முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது.

இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டிகளின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன.

இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.








GET UPDATES