தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்: இணையுமா அதிமுகவின் இரு அணிகள் ?

3 months agoமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் கோரிக்கைகளின் படி, சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்கிற மிக முக்கியமான கோரிக்கையை அதிமுக அம்மா அணி தற்போது செயல்படுத்தியுள்ளது. இதனால் அணிகள் இணைப்புக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

அதே வேளையில் தினகரன் நீக்கத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறிய பதில்கள் தான் பல்வேறு சட்ட சிக்கல்களை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதிமுகவின் அடிப்படை சட்டமான பைலாவின் படி, ”துனை பொதுசெயலாளரை, பொதுசெயலாளர் தான் நியமனம் செய்ய முடியும். அது நியமன பதவி என்பதால் இப்பதவிக்கு தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 30(5) படி ஒரு பதவிக்கான தேர்தலில் போட்டியிட குறைந்த பட்சம் அந்த நபர் கட்சியில் 5 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் சாராம்சத்தை காரணம் காட்டித்தான் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டத்தில் தினகரனை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒருவேளை அமைச்சர்கள் கூறுவது போல சசிகலா மற்றும் தினகரனை நீக்கிவிட்டு, இரு அணிகளும் இணைந்தால், இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டுவிடும். அதேவேளையில் கட்சியும் ஒன்றாகிவிடும்.
தினகரனுக்கு இருக்கும் இரண்டு வழிகள்

இரு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் தரப்பில் கடுமையாக போராடுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தினகரனுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. தன்னிடம் உள்ள அதரவு எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கலைக்க முற்படலாம் அல்லது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் தாமதத்தை காரணம் காட்டி, ஆவனங்களை நேரடியாக உச்சநீதிமன்றமே பரிசீலித்து தீர்ப்பு வழங்கும் படி மனு ஒன்றை தாக்கல் செய்யலாம்.

ஆனால் இந்த இரண்டு வழிகளையும் டிடிவி தினகரன் தரப்பு கடைபிடிக்க முன்வர தயங்குவது தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் எது நடந்தாலும், தமிழக அரசியலில் மற்றொரு மாற்றம் வரப்போவது மட்டும் உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
GET UPDATES