The News Sponsor By
feature-top
feature-top

வடக்கில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம், வட. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர்கள், வட. மாகாண சிரேஷ்ட பொது சுகாதார அதிகாரி, யாழ். மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வட. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிக்கையில், “இந்த வருடம் யாழ். மாவட்டத்தில் பூரண கட்டுப்பாட்டில் இருந்த டெங்கு தாக்கமானது செப்ரெம்பர் மாதம் வரை கட்டுப்பாட்டில் இருந்தது. எனினும் ஒக்ரோபர் மாதம் சடுதியான அதிகரிப்பை எட்டியுள்ளது.

கடந்த செப்ரெம்பர் முதல் டெங்கின் தாக்கம் ஆரம்பித்ததாகவும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வட. மாகாணத்தில் டெங்கின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதுடன் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலேலே அதிகளவில் காணப்படுகின்றது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை செப்ரெம்பரில் 154ஆகவும் ஒக்ரோபரில் 538ஆகவும் யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

வட.மாகணத்தில் டெங்கு தாக்கத்தினால் 2017ஆம் ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு 4 பேர் உயிரிழந்தனர். 2019 டெங்கு தாக்கத்தினாலான இறப்பு பூச்சியமாக காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உள்ளுராட்சித் திணைக்களத்தின் கீழான மன்றங்கள் மற்றும் சபைகளுடன் இணைந்து டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

டெங்கு நோய்க்கு காரணமான நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பாக அவதானமாகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஆளுநர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This News
feature-top
feature-top