The News Sponsor By
feature-top
feature-top

வடக்கு, கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத மண்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் சட்டவிரோதமான மண்கடத்தல் தலைவிரித்தாடுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை பிரதேசம் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் பொருத்தமான ஒரு அழகிய பிரதேசம் ஆகும். அப்பிரதேசத்திலுள்ள வெள்ளாமைச்சேனையில் மண்அகழ்வு தீவிரமாக உள்ளது.

இந்த அழகிய பிரதேசத்தை இன்று மண்கொள்ளையர்கள் தங்களது வருமானத்திற்காக கபளீகரம் செய்து கொண்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இப்பகுதியில் இரவு பகல் என்று பாராமல் மண் ஏற்றிச் செல்லப்படுவதால் வயல் நிலங்கள் சேமடைந்து வருவதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மண் கொள்ளையர்களிடம் இருந்து இப்பகுதியைப் பாதுகாப்பதற்காக இம்மக்கள் அஹிம்சை வழியில் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விவசாயப் பிரதேசம்தான் வெள்ளாமைச்சேனை ஆகும். இங்கு ஆயிரத்தி 1500 ஏக்கர் வயல் நிலங்கள் உள்ளன. 475 விவசாயிகள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். பெயருக்கேற்றாற் போல் வெள்ளாமைச் செய்கைக்கு பெயர் பெற்ற இடம் அதுவாகும்.

குளத்தில் இருந்து அவ்வப்போது திறந்து விடப்படும் நீரை நம்பியே தமது விவசாயத்தை ஓரளவேனும் பாதுகாத்து விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். ஆனாலும் அந்த வாய்க்காலில் உள்ள மண்ணையும் கொள்ளையர்கள் சூறையாடுகின்றனர். வாய்க்கால் மண் பதினைந்து அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்படுகின்றது. இதனால் வரம்பு சேதமாக்கப்படுவதுடன், வாய்க்காலில் செல்லும் நீர், வயல் மட்டத்தில் இருந்து பதினைந்து அடி கீழே செல்வதால் வயலுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

வாய்க்காலில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தினமும் இரவு வேளைகளில் பல ‘லோட்’ மணல் ஏற்றிச் செல்கின்றனர். மணல் அகழும் போது பெரிய மரங்கள் ஏதும் காணப்பட்டால் அதனை அழித்து விட்டு, சட்டவிரோதமாக மணல் ஏற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக மணல் அகழப்படுவதால், வாய்க்காலின் ஆழம் அதிகரித்து, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் நிலம் மற்றும் அணைக்கட்டுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

அகழப்படும் மண்ணை அவர்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வயல் நிலங்கள், சேதமடைந்த வீதிகள் மீண்டும் சேதமடைவதுடன், அதிவேகத்தில் அவ்வாகனங்கள் செல்லும் போது வீதியில் செல்லும் கால்நடைகளும் விபத்துக்குளாகின்றன. அத்துடன் நகரப் பகுதிகளுக்கு தேவைகளின் நிமித்தம் செல்லும்குழந்தைகள்,பெண்கள் உட்பட எவரும் வீதியில் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

“இப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் இரவு பகல் என்று பாராமல் எதுவித அச்சமுமின்று மண் ஏற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் ஏற்றும் உழவு இயந்திரத்தின் இலக்கங்கள் மற்றும் தகவல்களுடன் வாழைச்சேனை பொலிசாருக்கு தெரியப்படுத்தியும் கூட எந்தப் பயனும் கிடைத்து விடுவதில்லை. மறுநிமிடம் மண் கொள்ளையர்களுக்கு தகவல்கள் சென்று விடுகின்றது.

இதனால் பொலிஸாருக்கு மக்கள் தகவல் சொல்வதற்கு அச்சப்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விவசாய அமைப்பினால் பத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் எந்த முறைப்பாட்டுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் விவசாயிகளாகிய நாம் சந்தேகத்தின் மத்தியில் உள்ளோம்” என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

“இவ்விடயமாக வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்தும், கடிதங்கள் அனுப்பியும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அத்தோடு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் உழவு இயந்திரத்தினை அடையாளப்படுத்தி புகைப்படம் எடுத்து கொடுக்கப்பட்டும் இதற்கான எந்த நடவடிக்கையோ தீர்வோ எங்களுக்குக் கிடைக்கவில்லை.

விவசாய நிலங்களில் இருந்து மணல் ஏற்றிச் செல்லப்படுவதால் நாளடைவில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் இனிவரும் காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. அத்தோடு மாரி காலங்களில் வெள்ள நீரால் வயல் மூழ்கி விடுகின்றது.

“எமது ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மணல் அகழ்வைத் தடுத்து, மரம் வெட்டுவதையும் தடை செய்ய வேண்டும். மணல் அகழ்வில் ஈடுபடும் வாகனங்கள் வயல் நிலங்களை அழித்துச் செல்வதால் வேளாண்மைச் செய்கை செய்வதாயில் ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் மேலதிகமாக செலவு செய்து, வயல் நிலத்தை சமப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது” என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

“ஒவ்வொரு முறையும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதை அடையாளப்படுத்தி பொலிஸாருக்கு அறிவித்து வருகின்றோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை பெரும் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே நாங்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று அம்மக்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்று வந்தாலும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவே தெரிகிறது. மட்டக்களப்பில் இருந்து சூறையாடப்படும் மணல் கூடிய அதிக விலைக்கு தூர இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.வியாளேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலிஸாஹீர் மௌலானான, ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மௌனம் சாதிக்காது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகின்றனர் விவசாயிகள்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிடின் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் மகஜர் அனுப்பப் போவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Share This News
feature-top
feature-top