The News Sponsor By
feature-top
feature-top

Locust Attack | உதகை அருகே பிடிபட்ட புதிய வகை வெட்டுக்கிளியால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

ராஜஸ்தானில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள், ஒவ்வொரு மாநிலங்களாக படையெடுத்துச் செல்வதால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன.


இந்தியாவில் கடந்த ஆண்டும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இருந்தாலும், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பல்வேறு மாநிலங்களுக்கு படையெடுத்துவருகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பயிர்களை துவம்சம் செய்துள்ளன.


மணிக்கு 15 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வெட்டுக்கிளிகள் ஒரு நாளில் 150 கிலோமீட்டர் வரை கடக்கும்.  குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் தங்களது படையை தொடர்ந்து பெருக்கிவருகின்றன.



இதனால், தலைநகர் டெல்லி, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. பயிர்களில் தெளிக்க வேண்டிய பூச்சிகொல்லிகள் குறித்து அறிவித்து, அந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.


வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு, இங்கிலாந்தின் மைக்ரான் உள்ளிட்ட 2 நிறுவனகளிடமிருந்து 60 பூச்சிக்கொல்லி தெளிக்கும் அதிநவீன டிரோன்களை வாங்க முடிவு செய்துள்ளது. குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் சுமார் 303 பகுதிகளில் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ராஜஸ்தானில் இரவு நேரத்திலும் ஒளிரும் டிரோன்களின் உதவியுடன் வெட்டுகிளிகளின் பரவலை வேளாண் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.ராஜஸ்தானின் தோல்பூரில் பாத்திரங்களில் ஒலி எழுப்பி வெட்டுக்கிளி கூட்டத்தை அதிகாரிகள் விரட்ட முயற்சித்தனர்.



மத்தியபிரதேசத்தின் பன்னா பகுதியில் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்களில் சைரன் ஒலியை எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டினர்.


ஒடிசாவிற்கும் வெட்டுக்கிளிகள் வர வாய்ப்புள்ளதால், வேம்பு விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லியை பயிர்களில் தெளிக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் வெட்டுக்கிளிகளால் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியை பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தை சேர்ந்ததாக இருக்குமோ என அச்சமடைந்தனர்.


அந்த வெட்டுக்கிளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Share This News
feature-top
feature-top