அமெரிக்காவில் சில தினங்கள் முன்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, போர்ட்லேண்டிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் எதிர்பாரா அசம்பாவிதத்தை சந்தித்தது.
விமான சுவரின் ஒரு பகுதியாக இருந்த பேனல் ஒன்று, கதவு திறந்தார்போல பெயர்ந்து சென்றது. நடுவானில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவத்தை அடுத்து சமயோசிதமாய் செயல்பட்ட விமானி உடனடியாக புறப்பட்ட விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறங்கச் செய்தார். இதன் மூலம் விமானத்தின் 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என அனைவரும் உயிர் தப்பினர்.
அலஸ்கா விமானத்தில் இருந்து ஆகாயத்துக்கு பறந்து சென்றவற்றுள், பயணிகளின் செல்போன்களும் அடங்கும். அவற்றில் ஒன்று 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த பிறகும் ஆரோக்கியமாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான புதிய தலைமுறை ஐபோன் ஒன்று போர்ட்லேண்டின் சாலையோரத்தில் பல மணிநேரம் கழித்து மீட்கப்பட்டது. ஒரு புதருக்கு அடியில் கிடந்த அந்த ஐபோன், பேட்டரி சார்ஜ் குறையாது இருந்தது.