ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கெடுத்து வரும் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான ஈஸ்வரன், அமைச்சரவையில் சேரும் வாய்ப்பினை 2006-ல் பெற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் அவர் பங்காற்றி இருக்கிறார்.
2021 அமைச்சரவையில் அவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான பொறுப்புகளையும் கூடுதலாக கவனிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சிங்கப்பூா் எஃப் 1 காா் பந்தய விவகாரத்தில் தொழிலதிபா் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலா் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.