கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. தனது குடும்பத்தினருடன் காரில் சங்குத்துறை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.
பெம்பொன்கரை அருகே வந்த போது, முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது கோபியின் கார் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனமும், அதில் வந்த சிறுவனும் காரின் முன்பகுதியில் சிக்கியுள்ளனர். ஆனால் கோபி, காரை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.
காரின் முன்பகுதியில் பைக்கும், சிறுவனும் சிக்கியிருப்பதை கண்ட அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டும், கோபி தொடர்ந்து சங்குத்துறை கடற்கரை நோக்கி காரை இயக்கியுள்ளார். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இவ்வாறு கார் பயணித்துள்ளது.
சங்குத்துறை கடற்கரைக்கு வந்த போது, காரின் முன்பக்கம் தீப்பிடித்ததால், கோபி மற்றும் அவரது குடும்பத்தினர், காரை நிறுத்துவிட்டு அதிலிருந்து இறங்கி ஓடியுள்ளனர். சற்று நேரத்தில் சிறுவன், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.