சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் என்ற சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மலசகக்கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ரதான திருப்பமாக சிசிடிவி காட்சிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
அவரது மரணம் கொலை என நிரூபிக்கப்பட்டாலும் இன்று வரை அந்த கொலையை யார் செய்தார் என தெரியவில்லை. மேலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மௌலவி தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கின் பிரதான சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
அத்துடன், மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சம்பவ தினம் இடம்பெற்ற மாணவனது மரணம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வன்பொருளில் சேமிக்கப்ட்டிருந்த காணொளிகள் மௌலவியின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்ட நிலையில் அதனை மீள பெற்றுக்கொள்வதற்கு நீதிவானின் உத்தரவிற்கமைய கடந்த நீதிமன்ற தவணைகளில் அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அதற்கான தொழிநுட்பம் இன்மையினால் வன்பொருள் மீள பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இரந்து மீள பெறப்பட்ட சிசிடிவி வன்பொருளில் அழிந்த காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள கணனி தொழிநுட்ப பிரிவிற்கு அனுப்பி அழிக்கப்பட்ட காணொளிகளை பெற வேண்டும் என மரணமடைந்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மன்றிற்கு விண்ணப்பம் செய்தார்.
இதனை அடுத்து நீதிவான் குறித்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், சம்பவ தினம் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காணொளிகளை வன்பொருளில் அழித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என்ற வாதப்பிரதிவாதம் மன்றில் சட்டத்தரணியினால் ஆட்சேபனை முறையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது பொலிஸார் குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை அரச சாட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தனர்.
எனினும், நீதிவான் குறித்த வழக்கின் மேலதிக விசாரணைக்காக குறித்த சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் ஆஜராகி மன்றில் இவ்விடயம் தொடர்பில் நீண்ட சமர்ப்பணம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. (P)