ரொறன்ரோ பொலிஸ் சேவைக்கு சொந்தமான வாகனங்களுக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகரின் முக்கிய இடங்களில் காணப்படும் கமராக்களின் ஊடாக தானியங்கி அடிப்படையில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் ரோந்து வாகனங்கள், சிறைச்சாலை வாகனங்கள், கைதிகள் வாகனங்கள், வாகனத் தரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கும் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களும் குறித்த வேகக் கட்டுப்பாட்டை விடவும் அதிகளவு வேகமாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் தானியங்கி அடிப்படையில் கமராக்களினால் பதிவு செய்யப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு குற்றச் செயல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தை பொலிஸ் பிரிவு முதலில் செலுத்தும் எனவும் பின்னர் அந்த தொகை உரிய அதிகாரிகளிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.