அம்பாறை, திருக்கோவில் கல்வி வலயத்திக்கு உட்பட பாடசாலை மட்ட மரதன் போட்டியில் ஓட்டப் போட்டியில் பங்கெடுத்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திருக்கோவில் -03 துரையப்பா வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் விதுஜன் என் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
போட்டியில் பங்கெடுத்த மாணவன், திடீர் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சில மணித்தியாலங்கள் கழித்து அவர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், திருக்கோவில் வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அசமந்தப் போக்கே காரணம் எனத் தெரிவித்து, மாணவர்களும், பிரேதச மக்களும் திருக்கோவில் வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சிகிச்சைக்காக மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்றும், மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக அம்பாறை, கலகம் அடக்கும் பிரிவினரும், சாகாமம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் களமிறக்கப்பட்டிருந்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, பிரதேச பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் இன்று அவரது, சொந்த ஊடரான திருக்கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், சடலம் இன்று கொண்டு வரப்பட்டால், மாணவனின் இறுதிக் கிரியைகளை திருக்கோவில் இந்து மயானத்தில் இன்று நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக பொது மக்கள் பலர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களும், மாதாந்த கிளினிக்குளுக்காக செல்லும் நோயாளர்களும் தொடர்ச்சியாக வெகு நேரம் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அண்மைய சம்பவம் அங்கு நடந்துள்ளது.
எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அவசர சிகிசசை பிரிவானது, விரைவாக சிகிச்சையினை வழங்கவில்லை. அங்குள்ள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களின் பொறுப்புணர்வும் கேள்விக் குறியாகவுள்ளது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
நேற்றைய சம்பவம் தொடர்பில் திருக்கோவில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை நாடு முழுவதும் நிலவும் கடும் வெப்பமான வானிலைக்கு மத்தியில் பாடசாலை மட்டத்தில் வெளிப்புற நிகழ்வுகள் எதையும் நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது. (P)