முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்வார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசைத் தோற்றுவித்தார்கள்.
நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து, பொருளாதாரப் பாதிப்புக்கு வித்திட்டது.
நல்லாட்சி அரசின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் யார் என்பதைத் தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையைப் பகிரங்கப்படுத்தத் தயார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது, பொலிஸூக்குச் செல்ல வேண்டும் என்று மைத்திரிபாலவிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பயங்கரவாதம் தொடர்பிலும், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்தும் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டு கால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடைச் சிறைக்குச் செல்வார் – என்றார். (P)