விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுவதை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு நேற்று (28) அறிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பல்பொருள் அங்காடிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகள் சுற்றுச்சுழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆகவே, பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடப்படும் நிலையில், அவற்றின் பயன்பாடு குறைவடையும் எனவும், இதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு ஓரளவு மட்டுப்படுத்தப்படும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுவதை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அரவிடப்படவுள்ளது. (P)