ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது.

இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். (P)


Related Posts