இந்தியாவில் புனேவில் பிம்பாரி சின்ச்வாட்டில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு ஆர்டர் மூலமாக வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள், குட்கா மற்றும் சிறு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
நிறுவனத்துக்கான உணவுகளை ஆர்டர் எடுப்பதில் உணவக நிறுவனங்கள் இடையிலான போட்டி மற்றும் பொறாமை காரணமாக இந்த அவலம் நேர்ந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரஹீம் ஷேக், அசார் ஷேக், மசார் ஷேக், பிரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில், 3 நபர்கள் போட்டி நிறுவன பணியாளர்களின் மத்தியில் ஊடுருவி கலப்படத்தில் ஈடுபட்டதும், இதர 2 பேர் அதற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்துள்ளது. மனோகர் என்டர்பிரைசஸ் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் எஸ்.ஆர்.ஏ. என்டர்பிரைசஸ் என்ற போட்டி நிறுவனம் திட்டமிட்டதும், அதற்காக தனது ஊழியர்களை வேறு பெயர்களில் அனுப்பி ஆணுறை, குட்கா உள்ளிட்டவற்றை சமோசாக்களில் கலந்ததும் வெளிப்பட்டுள்ளது