ஈரான் வான் வழியை தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் காசா நகரை முற்றிலுமாக இஸ்ரேல் ராணுவம் உருக்குலைத்துவிட்டது. இந்த நிலையில், கடந்த 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரானின் முக்கியத் தளபதிகள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், உரிய தண்டனை வழங்கப்படும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

அதாவது, இஸ்ரேல் மீதான போரை தொடங்க ஈரான் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ட்ரோன்கள் மற்றும் துல்லியமான ஏவுகணைகள் மூலம் குண்டுகளை வீசி இஸ்ரேல் எல்லைகளைத் தாக்க ஈரான் போர்த்திட்டம் வகுத்துள்ளது.

2,000 கிமீ தொலைவில் இருந்து இலக்குகளை தாக்கும் வகையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஈரானில் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக இஸ்ரேலும் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது. 

இதனால் இரண்டு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.இதையடுத்து இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளன. 

போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் ஏர் இந்தியா விமானங்கள் ஈரான் எல்லையை தவிர்த்து வேறு பாதையில் பயணிக்கின்றன. வான்வழி தாக்குதலில் இந்திய விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்தியா இந்த எச்சரிக்கையை விமான போக்குவரத்து ஆணையத்துக்கு வழங்கி இருக்கிறது.

Related Posts