இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சீர்த்திருத்தங்கள் மற்றும் சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றமைக்கு சர்வதேச நாணய நிதிய பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஷெஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
IMF வேலைத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை அடைந்த வெற்றியை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய சமூக – பொருளாதார முன்னேற்றங்கள், சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாரிய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் திட்டங்களை தொடர்வதற்கான இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு தொடர்பில் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதன்போது தௌிவுபடுத்தியிருந்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனையும் ஷெஹான் சேமசிங்க சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணைக்கான மீளாய்வுகளை நிறைவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.