ஆசியாவிலேயே அதிக செலவுமிக்க நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், தேவையான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது.
இந்நிலையில் கடன் மதிப்பீட்டு நிறுவனமான மெனிலா, பாகிஸ்தானின் பணவீக்கம் தொடர்பான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் அங்கு பணவீக்கம் 25 சதவீதமாக இருக்கும் என்றும் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கத்தை 21 சதவீதத்துக்குள் கொண்டுவர பாகிஸ்தான் இலக்கு வைத்திருந்தது. ஆனால், அந்த இலக்கை எட்டமுடியாமல் அந்நாடு திணறிவருகிறது. இதனால், விலைவாசி கடுமையான அளவில் உயர்ந்துள்ளது.