ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி  ரத்துபஸ்வல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பே இன்று கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதால், அதனை அகற்றி சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 5 நாட்கள் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தின் போது, ​​இளம் ஊடகவியலாளர்கள் சங்கமும் பிரதேசவாசிகளும் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோனிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது .

அதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் மூவரடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டது.

விசாரணைகளையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், வாதி மற்றும் பிரதிவாதியின் எழுத்து பூர்வமான பேச்சுக்கள் தாமதமானதால், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts