எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரணிலே பொறுப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

என்னைக் கொல்வதற்கு அல்லது  சிறையில் அடைப்பதற்கு  சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்கு பொறுப்பு என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04) விசேட கூற்றை   இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்

சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் அஸ்லம் என்ற நபரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, 5 வருடங்களாக குற்றச் செயல் ஒன்றுக்காக சந்தேக நபராக இருக்கும் ஒருவரை சந்தித்துள்ளனர். இவ்வாறு குறித்த சந்தேக நபரிடம், அவரை பிணையில் வெளியில் எடுப்பதாகவும் இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் தெரிவித்து, எனக்கு எதிராக வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளனர்.

அதாவது சந்தேகத்தின் பேரில் 5 வருடங்கள் சிறையில் இருக்கும் குறித்த நபரின் குற்றச்செயலுக்கும் , எனக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வாக்குமூலத்தை அவர்கள் கோரியுள்ளனர் . மனுஷ நாணயக்கார குறித்த சந்தேக நபரை சந்தித்தமைக்கான ஆதாரம் என்னிடம்  உள்ளது.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நான் தீவிரமாக  செயற்பட்டு வருபவன் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை தாங்கிக்கொள்ள முடியாமல், என்னை எப்படியாவது கொல்வதற்கு அல்லது ஏதாவது ஒரு பிரச்சினைக்குள் சிக்கவைத்து, என்னை சிறையில் அடைப்பதற்கு சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு  வருகிறது என்பது எனக்கு புலனாகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில்  போதுமான ஆதாரங்களை வைத்துக்கொண்டே இதனை தெரிவிக்கிறேன். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்து, இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளேன்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ரணில் விக்ரமசிங்கவே  பொறுப்புக் கூறவேண்டும் என்பதை நான் இந்த சபையில்  பகிரங்கமாக தெரிவிக்கிறேன். ரணில் விக்ரமசிங்க போன்ற ஒருவரை   இந்த நாட்டின் தலைவராக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எமது வாழ்க்கையை அர்ப்பணித்து 15 வருடங்களாக  பணியாற்றியமைக்காக நான் வெட்கப்படுகிறேன்.

 அதேநேரம் மனுஷ நாணயக்கார பாரிய மோசடிக் காரர். அவர் 21ஆம் திகதிக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுவார். ஏனெனில், அரபு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் 75ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளார்.

அதேபோன்று இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு 90ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் சம்பாதித்த அளவு  ராஜபக்ஷ குடும்பத்தினர் கூட சம்பாதித்திருக்க மாட்டார்கள்  என்றே நான் நினைக்கிறேன்.

கொழும்பில் அவருக்கு இருக்கும் கட்டிடங்கள், காணி தொடர்பில் எங்களுக்கு தெரியும். அதனால் நான் சிறை  செல்கின்றேனோ  இல்லையோ, இந்த நாட்டு அப்பாவி பெண்களிடம் மோசடியாக பணம் பெற்றுக்கொண்டமைக்காக அவர் சிறைக்கு செல்வார்.

எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சதித்திட்டம் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் இது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். (P)


Related Posts