ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தையும் பாராட்டினார்.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (P)