மக்களை திருப்திப்படுத்தும் வகையில் பயனுள்ள மற்றும் திறமையான சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச ஊழியரின் அர்ப்பணிப்பு இன்றியமையாதது என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் பின்னணியில் மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே இம்முறை இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், பொதுச் சொத்துக்கள் பொதுச் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அந்தச் சொத்துக்களை மோசடி செய்யவோ அல்லது ஊழல் செய்வதற்கோ யாருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரச உத்தியோகத்தர் தனது கடமையின் எல்லைக்குள் மேற்கொள்ளும் ஒவ்வொரு மக்கள் சார்பான செயற்பாடுகளுக்கும் தாம் துணை நிற்பதாகவும், செய்யக்கூடாத விடயங்களைச் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (P)