மன்னார்- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர பகுதியில் காணப்படும் மன்னார் சதோச மனித புதைகுழி ஆகிய மனித புதைகுழிகள் இரண்டு தொடர்பான விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக புதன்கிழமை(16) எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
குறித்த வழக்கு விசாரணைகள் குறித்து அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் வி.எல்.வைத்திய ரெட்ண ,சி.ஐ.டி.உத்தியோகத்தர்களும்,காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணிகளும்,அரச சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
இதன் போது ஏற்கனவே மனித எச்சங்களில் இருந்து பகுப்பாய்விற்கு பிரித்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்ற கட்டுக் காவலில் இருப்பதாகவும்,அதனை சீ-14 பரிசோதனைக்காக புலோரிடா விற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளுக்காக வைத்தியரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதிமன்றத்தினால் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வைத்தியர் ‘கே’ வகையினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளுக்கான அறிக்கை புதன்கிழமை (16) மன்றில் சமர்ப்பிக்கப்பட இருந்தது.எனினும் அவர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால் குறித்த அறிக்கையை எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி தாக்கல் செய்வதாக தவணை எடுக்கப்பட்டுள்ளது (P)