ஐ.நா தலைவர் மீதான இஸ்ரேலின் தடைக்கு, எதிரான கடிதத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் இணைவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ்,  நாட்டுக்குள் நுழைய  தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம், சிலி நாட்டு அலுவலகத்திடம், குறித்த கடிதத்தில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. 

வேறு பல நாடுகளும் ஒப்பமிட்டோர் பட்டியலில், தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என  கோரியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பலஸ்தீன பிரச்சினைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான இந்த கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா மற்றும் உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும் பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கடிதம் கையெழுத்தாகிறது.

இந்நிலையில் எழுத்தாளர் சிராஜ் மஷுர் அவர்கள் தனது பேஸ்புக் பதிவில் பலஸ்தீன் விவகாரத்தில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அதில் புதிய NPP அரசாங்கம் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளது. பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். புதிய அரசாங்கம் ஏதாவது தவறுவிட மாட்டாதா என்று சிலர் காத்துக் கிடகின்றனர்.

அந்த அவசரத்தில், கிடைத்த வாய்ப்புக்குள் பந்தடித்து விளையாடப் பார்க்கிறார்கள்.

பலருக்கு குற்றம் சாட்டும் வேகத்தில் விவேகம் இல்லாமல் போய் விட்டது.

Fact Checking செய்ய அவகாசம் எடுக்காமல், ‘உறுதிப்படுத்தப்படாத செய்திகளை’ அவசர அவசரமாக ‘அடித்து’ விடுகின்றனர்.

அதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உள்ளது. அதுவும் தேர்தல் காலத்தில் சொல்லவும் வேண்டுமா? தேசிய மக்கள் சக்தி ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கான ஆதரவில் மிக உறுதியாகவே உள்ளது. அது நீண்டகால கொள்கை நிலைப்பாடு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இலங்கை-பலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் முன்னணி செயற்பாட்டாளர். அப்படி இருந்துகொண்டு இப்படி நடப்பார்களா என்று முதலில் தேடி அறிய வேண்டும்.

புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சுதந்திர பலஸ்தீன தாயகத்திற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், காஸாவிற்கு எவ்விதக் கட்டுப்பாடுமற்ற மனிதாபிமான வாயில்களைத் திறந்து விட வேண்டும் என்றும் வேண்டியுள்ளார்.

லெபனானில் ஐ.நா.அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார்.

அந்த ஐ.நா. அமைதிப் படையில் 126 பேர் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதையும் நிதானமாக விசாரித்து, ஆய்ந்தறிந்து எழுதுவதுதான் ஊடக அறம். உண்மையைத் தேடுவோர் அப்படித்தான் செய்வர். பிழை பிடிக்கத் தேடுவோர் அவசர கதியில் இந்த ‘அறத்தை’ ‘மறந்து விடுவார்கள்-என்று பதிவிட்டுள்ளார். (P)

Related Posts