ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (20) தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் முறையான விசாரணையை ஆரம்பித்த பின்னர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகள் இரகசியமானவை அல்ல எனவும் அவர் கூறினார்.
கட்டுநாயக்கவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டு அறிக்கைகளும் சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கொழும்பு பேராயரின் செயலாளர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் தமக்கு அறிவித்ததாகத் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே அவை இரகசிய அறிக்கைகள் அல்ல என அவர் வலியுறுத்தினார்.
எனினும் அந்தக் குழுக்கள் விசாரணைக் குழுக்கள் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, விசாரணைகளை நசுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில குழுக்களை அமைத்தார் என்றும் கூறினார்.
”இந்த இரண்டு குழுக்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்டவை. இவை விசாரணைக் குழுக்கள் அல்ல. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 காணொளியின் அறிக்கையை ஆராய ஒரு குழுவும், பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு உள்ளதா என ஆராய இரண்டாவது குழுவும் அமைக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை நசுக்க ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான சில குழுக்களை அமைத்தார்” என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு புதிய அரசாங்கம் பொலிஸ் மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட நபர் ஒருவர் கோமா நிலையில் இருந்து எழுந்து ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“அரசு முறையான விசாரணையை ஆரம்பித்ததும் கோமா நிலையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டனர். முறையான விசாரணைக்கு பயப்படுகிறார்கள். இதை நாசப்படுத்த நினைக்கிறார்கள். அறிக்கைகளைப் பற்றிப் பேசுபவர் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. உண்மையான குற்றவாளிகளை மறைப்பதே அவரின் உண்மையான நோக்கமாகும்
அவரும் அவர்களின் ஒப்பந்தத்தில் உள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அகப்பட மாட்டோம். நாம் முறையான விசாரணையை நடாத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். அந்த நபர் இவ் விசாரணைகள் நடைபெறுவதை தடுக்கவே முயல்கிறார்.
மறைக்க அல்லது பாதுகாக்க எங்களிடம் யாரும் இல்லை" என்று ஜனாதிபதி கூறினார். (P)