இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேக நபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று (24) பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்.
இந்திய RAW உளவுத்துறை உளவுத்துறை தகவல்களை வழங்கியதாகவும், தாக்குதல்களை நடத்துவதற்காக சந்தேக நபர்களுக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் சில ஊடக அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர் மறுத்தார்.
“இவை முற்றிலும் பொய்யானவை. இவற்றை சரிபார்க்காமல் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஏற்கனவே அந்த ஊடக நிறுவனங்களுக்கு விளக்கங்களை அனுப்பியுள்ளோம், ”என்று அவர் கூறினார்.
மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை எனவும், அவர்கள் எந்த அமைப்புடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது குறித்து தற்போது தகவல் இல்லை எனவும் ஊடகவியலாளர் கேள்வியொன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள், குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை இப்போது வெளியிட வேண்டிய அவசியமில்லை. அவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடுவது, விசாரணைக்கு இடையூறாக இருக்கும். நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை, ”என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க முன்னர், அமெரிக்க தூதுவர் இது குறித்து என்னுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானித்து அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள், மற்றும் வெளிநாட்டவர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகையில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நிலைமையை சமாளித்து விட்டோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். (P)