வேற்று கிரக ஆராய்ச்சி மையம்: லடாக்கில் தொடங்கியது இஸ்ரோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது.

விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இதற்காக அங்கு அனலாக் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைத்துள்ளது.

வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து, அங்கு ஆய்வுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனையை நடத்துவதற்கு முடிவு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அந்த அடிப்படையில் இந்த, 'அனலாக்' சோதனையை லே பகுதியில் நடத்தி வருகின்றனர்.

இந்த அனலாக் ஆய்வு மையத்தில் புதிய தொழில்நுட்பம், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகம் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர் சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளன. 

லடாக் மலை மேம்பாட்டுக் குழுமம், மும்பை ஐஐடி, லடாக் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது. செவ்வாய் கிரகம் மற்றும் நிலவின் நிலப்பரப்புகளை நெருக்கமாக ஒத்திருக்கும் அதன் தனித்துவமான புவியியல் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லடாக்கில் இந்த அனலாக் ஆய்வு பணியை நடத்த இஸ்ரோ முடிவு செய்தது. 

அதன்படி இங்கு ஆராய்ச்சி தொடங்கியுள்ளது. லடாக்கின் குளிர், வறண்ட நிலைகள் மற்றும் அதிக உயரம் ஆகியவை நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளைச் சோதிக்க சிறந்த சூழலை வழங்குவதாக கூறப்படுகிறது. 

இந்த முயற்சியானது, இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ககன்யான் திட்டம் உட்பட, மனித விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளில் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Related Posts