நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொய் கூறி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அன்றைய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க மற்றும் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 முன்னாள் அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (11) பிற்பகல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 182 மருந்துகள் தட்டுப்பாடு என்றும் 17 மருந்துகள் இல்லை என்றும், மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் பொய்யாக அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்த மருந்துகள் என்னவென்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அப்போது மருந்து தட்டுப்பாடு இல்லை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டில் தட்டுப்பாடு இல்லாத மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சந்தேக நபரான கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு எந்த அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்பதை கண்டறிய வேண்டும்.
எனவே, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளனர். (P)