பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த வாலிபரின் கண்ணை எலி கடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் நடந்த ஒரு மோதலின் போது பண்டூஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் மறுநாள் அவர் இறந்து போனார். இரவு நேரம் என்பதால் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.உடல் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்தது
இந்த நிலையில் நேற்று காலை பண்டூஷின் உடலை பரிசோதனை செய்ய கொண்டு சென்ற போது அவரது இடது கண் இல்லை. அந்த கண் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.பண்டூஷின் கண்களின் மீது ஒரு எலி இருந்ததாகவும், கண்ணை எலி தின்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடல் இருந்த படுக்கை அருகே அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி ஒன்று இருந்து உள்ளது. எனவே யாராவது கண்ணை தோண்டி எடுத்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இறந்து போன வினோத் குமாரின் கண்ணை யாராவது தோண்டி எடுத்தார்களா? அல்லது எலி தின்றதா? என்று தெரியவில்லை. இது தொடர்பான விசாரணைக்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.