2022ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி செய்துள்ளது. ஆனால், எந்தவிதமான விதமான ஆயுதங்கள் இருந்தன என்பதைப் பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் முதன்முறையாக அமெரிக்க, பிரிட்டிஷ் ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவி தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உக்ரைனுக்குள் ஏவியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில், இந்த ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.