ABBA இசை நிகழ்ச்சியில் உயர்மட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்றதை விமர்சிக்கும் சமூக ஊடக அறிக்கைகளுக்கு பதிலளித்த மவுன்ட் லவீனியா ஹோட்டல், நிகழ்வுக்கு அவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டதாக தெளிவுபடுத்தியுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் டில்வின் சில்வா ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
"சுற்றுலாத்துறை தொடர்பான நிகழ்வாக, கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதில் அவர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்." என ஒரு அறிக்கையில், ஹோட்டல் வலியுறுத்தியுள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு இலங்கையின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கும் அதன் நோக்கத்தின் ஒரு பகுதியாக ABBA ஷோவை நடத்துவதில் பெருமையடைவதாக ஹோட்டல் மேலும் தெரிவித்தது. (P)