கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு, குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் (MPP) ஹர்தீப் க்ரேவால் தனது குடும்பத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, நாட்டில் உள்ள இனவெறுப்பு பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்டன் ஈஸ்ட் தொகுதியைச் சேர்ந்த சீக்கிய இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ஹர்தீப் க்ரேவால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் மஸ்கோகா (Muskoka) பகுதியில் ஓய்வு நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த ஒரு அந்நியர், "ஏ தலைப்பாகைத் தலையா (Hey turban head), உன் நாட்டுக்குத் திரும்பிப் போ" என்று கத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர் "நீங்களெல்லாரும் சாகவேண்டும் (You all should die)" என்று கொடூரமாக கூறியுள்ளார். இந்த சம்பவம் ஹர்தீப்பை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது, ஆனால் அவர் அதனை பொறுத்துக்கொண்டு தனது குடும்பத்தை பாதுகாத்தார்.
இது முதல் முறையல்ல என்று கூறும் ஹர்தீப், இனவெறுப்புக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என்பதை இந்த சம்பவம் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர், சமூக ஊடகமான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இல் இந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டு, "என் சீக்கிய சகோதர சகோதரிகளே, கவனமாக இருங்கள், பெருமையுடன் இருங்கள், உறுதியாக இருங்கள். வன்முறை வென்றதாக சரித்திரமே இல்லை, நல்லெண்ணமே வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
