மான்ட்ரீயல் நகரில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பள்ளியின் நுழைவாயிலருகே 14 வயது மாணவி ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மான்ட்ரீயல் காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8:50 மணியளவில், வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, நோட்ரே டேம் டி கிரேஸ் பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. பள்ளி நுழைவாயிலில் நின்றிருந்த 14 வயது மாணவி ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டார். இதில் அவரது கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு பல 911 அவசர அழைப்புகள் வந்ததையடுத்து, காவல்துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். இதன் அடிப்படையில், 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டு, இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் இருவரும் சிறுவயதினர் என்பதால், அவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. தற்போதைய தகவல்களின்படி, இந்த சம்பவம் தனிப்பட்ட முரண்பாடு அல்லது முன்விரோதத்தின் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் இது குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.
