கனடாவை சேர்ந்த 59 வயதான டொனாஜின் வைல்ட், என்ற பெண்மணி ஒரு மணிநேரத்தில் 1,575 புஷ்-அப்களை சாதனையை படைத்துள்ளார். அவரின் வயது வெறும் எண்ணிக்கையில் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் அவரது உடல் இன்னும் 30 வயதுக்குள்ளாகவே உள்ளது. டொனாஜின் வைல்ட் 59 வயதிலும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
டொனாஜின் வைல்ட் என்ற 59 வயதான பெண்மணி, ஒரு மணி நேரத்தில் 1,575 புஷ்-அப்களை செய்து கின்னஸ் உலக சாதனையில் தனது பெயரை பதிவு செய்தார். எலும்பின் வலிமைக்காக மக்கள் பெரும்பாலும் சப்ளிமெண்ட்டுகளை நம்பியிருக்கும் இந்த காலகட்டத்தில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது தான் கூடுதல் சிறப்பு. கடந்த மார்ச் மாதம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் 11 வினாடிகள் பிளாங்க் பொசிஷனில் இருந்து உலகையே வியப்பில் ஆழ்த்திய தனது முந்தைய சாதனைக்குப் பிறகு டொனாஜின் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும் முழங்கைகளை 90 டிகிரிக்கு வளைத்து, பின்னர் கைகளை முழுமையாக நேராக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் முந்தைய புஷ்-அப் சாதனையை 17 நிமிடங்களுக்கு முன்னதாக முறியடித்துள்ளார். அவரது இந்த சாதனையானது கின்னஸ் உலக சாதனை அமைப்பில் இருந்து வந்த இரண்டு நடுவர்களால் கண்காணிக்கப்பட்டது.
அதன் பிறகு, அவரது புஷ்-அப்கள் ஸ்கோர்போர்டில் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டன.
இந்த சாதனையை தொடங்கியபோது, அவரது 11 வயது மற்றும் 12 வயது பேரக்குழந்தைகள் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தினர். அவரது சாதனை முடிந்ததும், பேரன் எனது பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். நான் என் கண்ணீரை அடக்கி, என் இலக்கில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது என்று டோனாஜின் கூறினார். மேலும், நான் இன்னும் புஷ்-அப்ஸ் செய்யலாம் என நினைத்தேன் என்றும் அவர் கூறினார்.
புஷ்-அப்கள் ஆனது வயதானவர்களின் வலிமையைக் கட்டியெழுப்பவும், பராமரிக்கவும் சிறந்தவை ஆகும். மார்பு, தோள்பட்டை மற்றும் ட்ரைசெப்ஸ் போன்ற முக்கியமான தசைகளை பலப்படுத்தப்படுகின்றன. இது முதுகு வலியைக் குறைக்கிறது. புஷ்-அப்களை செய்வதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுகிறது. இந்த உடற்பயிற்சி முதியவர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது மற்றும் இதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.