2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு கனேடிய பொருளாதார நிபுணர் பீட்டர் ஹவிட் (Peter Howitt), நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயல் மோகிர் (Joel Mokyr) மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பிலிப் ஆகியோன் (Philippe Aghion) ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆஃப் சயின்சஸ் இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இவர்கள் மூவரும் “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சி” (Innovation-driven economic growth) குறித்து மேற்கொண்ட ஆய்வுகளுக்காக இந்த மதிப்புமிக்க விருது பெற்றுள்ளனர்.
பீட்டர் ஹவிட் மற்றும் பிலிப் ஆகியோன் ஆகியோர் கணித மாதிரிகளைப் பயன்படுத்தி “படைப்பாற்றல் அழிவு” (Creative Destruction) என்ற கொள்கையை விளக்கியுள்ளனர். இந்தக் கொள்கை, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பழையவற்றை மாற்றுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதை விளக்குகிறது.
இந்தக் கொள்கை முதன்முதலில் பொருளாதார நிபுணர் ஜோசப் ஷும்பிட்டர் (Joseph Schumpeter) அவர்களின் 1942 ஆம் ஆண்டு வெளியான Capitalism, Socialism and Democracy என்ற நூலில் விவரிக்கப்பட்டது.
ஹவிட் இது குறித்து கூறுகையில், “நான் 30 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும் ஆகியோனுடன் இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் குடும்பத்துடன் ஸ்வீடனுக்கு சென்று இந்த வெற்றியைக் கொண்டாட ஆவலாக உள்ளோம்,” என்று தெரிவித்தார்.
