கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர்கள் அறுவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் 2016 ஆம் ஆண்டு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததையடுத்து, ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி, நாரஹேன்பிட்டி உத்யான வீதியில் உள்ள மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மஞ்சுள மகேஷ் ஜயதிலக என்பவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவருக்கு காயம் ஏற்பட்டமை தொடர்பில் 8 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் வழக்கு விசாரணையின்போது இறந்துவிட்டனர்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரதிவாதிகளுக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
அதன்படி இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (P)