வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் 7-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம் - புதுச்சேரி இடயே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மெதுவாக கடந்ததால் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தநிலையில் உள்மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இந்தநிலையில், ஏரிகள், ஆறுகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே பரசன் ஏரி உள்ளது. அந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள், கார் ஆகியவை இழுத்துச் செல்லப்படும் காட்சி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.