காய்ச்சலால் யாழில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஐந்து நாள்கள் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரஞ்சிதா (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். காய்ச்சல் நிற்காததை அடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார். இதன்போது அவர் அங்கு மயங்கி வீழ்ந்துள்ளார்.  

அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அவரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சுவாசத் தொகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு உண்ணிக் காய்ச்சல் அல்லது எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது. எனினும், எவ்வாறான நோயால் அவர் உயிரிழந்தார் என்பது கொழும்பில் இருந்து பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர். (P)


Related Posts