தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜுன் 25-ம் தேதி இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்தது தொடர்பாக கங்கேசன்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை மீனவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்து மீனவர்களில் 9 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகின் ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடாக 35 லட்சம் ரூபா வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.