நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடி கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2-வது பாகம் உலகம் முழுவதும் கடந்த 5-ஆம் திகதி 12ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.

படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.

 பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த பொலிஸார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், அல்லு அர்ஜுனை இன்று (13)  கைது செய்த பொலிஸார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனது வீட்டில் வைத்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த பொலிஸார் காவல் நிலைய வாகனத்தில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவருடன் திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுவது மற்றும் திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (P)


Related Posts