தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் சுமார் 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும்.
அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி தொகையில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது.
அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (P)