இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (P)